பேசாமொழி பதிப்பகம்

தமிழில் சினிமா சார்ந்த விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது. நேரடியான காரணம், அது சார்ந்து கல்வி இல்லை. அது சார்ந்த கல்வி உருவாக என்ன செய்ய வேண்டும். மிக எளிதான பதில், அது சார்ந்த புத்தகங்களை அதிகமாக கொண்டுவர வேண்டும். அதற்கு என்ன வழி, சொந்தமாக பதிப்பகம் ஆரம்பிப்பதுதான். இப்படி தொடங்கப்பட்டதுதான் பேசாமொழி பதிப்பகம். அதாவது தமிழில் சினிமா சார்ந்த கல்வி வேண்டும், அதனை பொதுமக்களிடம் அதிகமாக கொண்டு சேர்க்க வேண்டும். அதற்கு தமிழில் சினிமா தொழில்நுட்பம் சார்ந்து நிறைய புத்தகங்களை பதிப்பிக்க வேண்டும். ரசனை சார்ந்து, இதுவரையிலான சினிமா அரசியல் சார்ந்து, தமிழ் ஸ்டுடியோ இயக்கத்தின் சித்தாந்தங்களை பரவலாக கொண்டு சேர்க்க என பல்வேறு வடிவங்களில் புத்தகங்களை பதிப்பிக்க பேசாமொழி பதிப்பகத்தை தொடங்கினோம். இதுவரை பனிரெண்டு புத்தகங்களை பதிப்பித்துள்ளோம். தமிழ் சினிமா வரலாற்றில் தலித் சினிமா என்கிற புதிய வகைப்பாட்டினை பேசாமொழி பதிப்பகம்தான் உருவாக்கியது. ஒளிப்பதிவு கல்வி சார்ந்து முக்கியமான புத்தகத்தை பதிப்பித்தது. நிகழ்காலத்தில் சினிமாவில் நடந்துகொண்டிருக்கும் மாற்றங்களை பதிவு செய்யும் மிக முக்கியமான புத்தகமாக மாற்று சினிமா நிழலா, நிஜமா என்கிற புத்தகத்தை கொண்டு வந்தது. இந்திய சினிமாவின் புதிய முயற்சியாக ஒரு இயக்குனரே ஒரு திரைப்படம் எப்படி உருவானது என்பதை பதிவு செய்து, அந்த குறிப்பிட்ட படத்தின் திரைக்கதை, ஸ்டோரி போர்ட் உள்ளிட்டவற்றை விவரிக்கும் வகையிலான "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" என்கிற புத்தகத்தை வெளியிட்டோம். இயக்குனர் மிஷ்கினின் இந்த புத்தகம் மட்டுமின்றி அவரது ஐந்து திரைக்கதை புத்தகத்தையும் பேசாமொழி பதிப்பகம் சார்பாக வெளியிட்டோம்.