வில்லியம் ஷேக்ஸ்பியர்
உலக புத்தக தினத்தில் ஷேக்ஸ்பியர்.
ஏப்ரல் 23ஆம் தேதி உலக புத்தகம் தினம் என்று கொண்டாடுகிறோம். இந்த தினத்தில்தான் உலகைப் புகழ் பெற்ற இலக்கியவாதியான ஷேக்ஸ்பியரின் பிறந்தநாளும், இறந்தநாளும், ஆங்கில நாடகாசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் 23.04.1564 - ஆம் ஆண்டு இந்த தினத்தில்தான் இங்கிலந்தின் ஸ்ட்ராட்ஃபோட் ஆன் ஆவனில் (Stratoford-on-Avon) பிறந்தார். 52 ஆண்டுகளே வாழ்ந்த இந்த நாடகாசிரியர் 1616ஆம் ஆண்டு இதே தினத்தில் மறைந்தார்.
தன்னை ஒரு சிறந்த இலக்கியவாதியாக உலகம் கொண்டாடும் என்று எண்ணிக் கூட பார்த்திருக்கமாட்டார். பழைய நாடகங்களை மறுவடிவம் செய்து மக்கள் விரும்பும்படி அளிப்பவர், நடிகர், கவிஞர், நாடக மேலாளர், வசன கர்த்தா, ஆங்கில மொழிக்கு 3000 வார்த்தைகளுக்கு மேல் அளித்தவர், என்று பல்வேறு பரிமாணங்கள் ஷேக்ஸ்பியருக்கு உண்டு. அவரது பல்வேறு மேற்கோள்கள் உலகின் பல மொழிகளில் உள்வாங்கப்பட்டு பழமொழிகளாக வழக்கில் உள்ளன. அந்த மாமனிதன் பற்றி உலகப் புத்தக தினத்தன்று சற்று நினைவுகூர்வோம்.
குளோப் தியேட்டர் ஷேக்ஸ்பியர் எழுதிய பல நாடகங்கள் லண்டனில் உள்ள குளோப் தியேட்டரில் அரங்கேறியது. ஒரு தலைசிறந்த நாடகக் கலைஞராக அவரது புகழை அந்த நாடகங்கள் உறுதிப்படுத்தியது. அவரது படைப்புகள், சோகம், நகைச்சுவை உள்ளிட்ட பல்வேறு உணர்வுகளை வகைப்படுத்துவதாக அமைந்து உள்ளது.
இலக்கிய படைப்புகள் ஷேக்ஸ்பியரின் படைப்பூக்கம் மிக்க கைகளில் இருந்து 39 நாடகங்கள், 154 சொனெட்டுகள், இரண்டு கதை கவிதைகள் மற்றும் பல நீண்ட கவிதைகள் உருவாக்கி உள்ளார். “ரோமியோ ஜூலியட்”,நாடகம் குடும்ப மோதல்களால் முறியடிக்கப்பட்ட இளம் ஜோடிகளின் காதல் கதையை பேசுகிறது.
ஹேம்லெட் நாடகம்,பழிவாங்குதல்,பைத்தியக்காரத்தனம் மற்றும் இறப்பு ஆகியவற்றின் கருப்பொருள்களை ஆராயும் ஒரு தலைசிறந்த படைப்பாக உள்ளது.
"மக்பத்" லட்சியம், அதிகாரம் மற்றும் தார்மீகச் சிதைவின் இருண்ட மற்றும் வேட்டையாடும் கதையாக உள்ளது.
இலக்கியம் மற்றும் கலைகளில் வில்லியம் ஷேக்ஸ்பியரின் தாக்கம் அவருடைய காலத்திற்கு அப்பாற்பட்டது. அவரது படைப்புகள் உலக மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டு எண்ணற்ற திரைப்படங்கள், நாடகங்கள் மற்றும் இசை நாடகங்களாக மாற்றப்பட்டுள்ளன.
இங்கிலாந்தில் 1616ஆம் ஆண்டு ஏப்ரல் 23 அன்று தனது 52ஆவது அகவையில் ஷேக்ஸ்பியர் காலமானார். அவரது வாழ்க்கை மற்றும் படைப்புகள், படைப்பாற்றல் மற்றும் கற்பனையின் நீடித்த சக்திக்கு சான்றாக நிற்கின்றன.
மொழி மற்றும் கதைசொல்லல் ஆகியவற்றில் தனது தேர்ச்சியின் மூலம், அவர் இலக்கிய உலகில் ஒரு அழியாத முத்திரையை பதித்து உள்ளார்.
அவரது எழுத்துக்கள் தலைமுறைகளை கடந்த எழுத்தாளர்கள், நடிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது.
அவரது நாடகங்கள் மற்றும் கவிதைகளின் பக்கங்களில் நாம் பயணிக்கும்போது, மனிதர்களாக நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் காலமற்ற உண்மைகள் மற்றும் உலகளாவிய கருப்பொருள்கள் நமக்கு நினைவூட்டுகின்றன.
”கோழைகள் இறப்பதற்கு முன் பலமுறை இறக்கிறார்கள்; வீரம் மிக்கவர்கள் மரணத்தை ஒருமுறை சுவைக்க மாட்டார்கள்” என்ற அவரது வாசகம் காலத்திற்கும் நிலைத்து நிற்பதாக அமைகிறது.
படிப்பறிவை பள்ளி தொடக்க காலத்திலேயே பாதியில் விட நேரிட்டாலும் பட்டறிவு மூலம் தன்னை முழுமையாக பட்டை தீட்டிக்கொண்ட ஷேக்ஸ்பியர், நாடகாசிரியர், நடிகர், கவிஞர், எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கினார். மேலும் அவரது அயராத முயற்சியும், கடின உழைப்பும்தான் அவரை உலக நாடக அரங்கின் உச்சத்துக்குக் கொண்போய் சேர்த்தன.
ஷேக்ஸ்பியர் 24 ஆண்டுகள் (1588-1613) ஆண்டுகளில் தீவிர இலக்கியவாதியாக செயல்பட்டார். இலக்கிய வடிவங்களிலேயே நாடகத்தை இயற்றுவதுதான் சிரமம் என்பார்கள், மேற்கத்திய இலக்கியவாதிகள். ஏனெனில் மற்ற இலக்கியங்களில் பூமியில் இருக்கும் ஒருவரை உலகம் முழுவதும் கொண்டுசெல்ல முடியும். ஆனால் நாடகத்தில், எல்லா செயல்களையும் சிந்தனைகளையும் மேடையில் நடித்துக்காட்டக் கூடிய வகையில் அமைக்க வேண்டும். அதன் வரவேற்பை மக்களிடம் நேரிடையாகக் காண வேண்டும். மக்கள் ரசித்தால்தான் அந்த காலத்தின் வெற்றிகரமான படைப்பாக நாடகம் விளங்கும்.
தனக்கு முன்பிருந்த நாடகக் கலையின் அம்சங்களில் பல்வேறு புரட்சிகளை புகுத்தியவர் ஷேக்ஸ்பியர். இவரது நாடகங்களை இன்பியல் நாடகங்கள் (comedies), துன்பியல் நாடகங்கள் (Tragedies), வரலாற்று நாடகங்கள் (Histories) என்று மூன்று வகையாக வகைப்படுத்தினாலும் இவற்றின் கலவையையும் அறிமுகப்படுத்தியவர், ஷேக்ஸ்பியர். இன்பியலாக ஆரம்பித்து துன்பமான முடிவு கொள்ளும் நாடகங்கள் (Comic tragedies), துன்பியலாக ஆரம்பித்து இன்பமான முடிவு கொள்ளும் நாடகங்கள் (Tragi comedies) என்றும் பல்வேறு நாடக வடிவங்களை அறிமுகப்படுத்தினார் ஷேக்ஸ்பியர்’.
இலக்கியம் என்பது காலத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி. ஷேக்ஸ்பியர் இங்கிலாந்தில் மறுமலர்ச்சி காலத்தைச் சேர்ந்தவர். எலிசபெத் மகாராணியின் ஆட்சிக்காலம் ஆங்கில இலக்கியத்தின் பொற்காலம். இந்த காலத்தில்தான் இங்கிலாந்து கல்வியிலும் செல்வத்திலும் செழித்தோங்க தொடங்கியது. எலிசபெத் மகாராணியின் ஆட்சியின் கீழ் செழுமை அதிகரிக்கத் தொடங்கியதால் மக்களுக்கு பொழுதுபோக்கிற்காக நேரம் கிடைத்தது. இந்த நேரத்தை நாடகங்கள் பயன்படுத்திக்கொண்டன. ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் மறுமலர்ச்சி கால இங்கிலாந்தின் வாழ்க்கையைப் பிரதிபலித்தன.
ஒவ்வொரு படைப்பாளியின் படைப்புக்களையும் அவரது பல்வேறு காலங்களில் பரிணாம வளர்ச்சியின் மூலம் தொகுக்கலாம் என்பார்கள் மேற்கத்திய விமர்சகர்கள். ஒவ்வொரு காலத்திலும் இலக்கியவாதியின் படைப்பு சில குறிப்பிட்ட அம்சங்களை உள்ளடக்கியிருக்கும். ஷேக்ஸ்பியரின் படைப்புக்கள் நான்கு காலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ஷேக்ஸ்பியரின் இரண்டாம் படைப்புக்காலம் கி.பி. 1594லிருந்து 1600 வரையிலானது. இந்த காலத்தில் அவரது படைப்புத்திறன் மேலும் செழித்தோங்கியது. இந்த காலத்தில் படைக்கப்பட்ட ஹென்றி, ஹென்றி ஐந்தாம் பாகம், வரை வரலாற்று நாடகங்கள் முந்தைய நாடகங்ளை விட அருமையானவை. The Taming of the Shrew, The Merry wives of Windsor, Much Ado about nothing, As you Like it, Twelfth Night ஆகிய சுவாரஸ்யமான நாடகங்கள் இந்த காலத்தில் படைக்கப்பட்டன.
முதல் காலம் கி.பி. 1588லிருந்து கி.பி. 1594ஆம் ஆண்டு வரையிலானது. இந்தப் பகுதியில் வரலாற்று நாடகங்களுக்கு முன்னுரிமை கொடுத்தார் ஷேக்ஸ்பியர். அந்த காலத்தின் அரசியல் நுணுக்கங்களையும் ஆட்சியாளர்களின் நெளிவு, சுளிவுகளையும் தன் வரலாற்று நாடகங்களில் அமைத்திருப்பார் ஷேக்ஸ்பியர். ஹென்றி, ரிச்சர்ட், கிங் ஜான், ஆகிய நாடகங்கள் இந்த காலத்தின் போது படைக்கப்பட்டாலும் மற்ற வகை நாடகங்களையும் படைத்தார். காதல் காவியமான ரோமியோ ஜூலியட், காதல், இன்பம், துன்பம், சாதுர்யம் என்று அனைத்தும் கலந்த நாடகமான தி மெர்ச்சண்ட் ஆஃப் வெனிஸ், சிரிப்பு நாடகங்களான லவ்ஸ் லேபர்ஸ் லாஸ்ட், காமெடி ஆஃப் எரர்ஸ், டூ ஜென்டில் மேன் ஆஃப் வெரோனா, எ மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம் ஆகிய நாடகங்களும் இக்காலத்தில் படைக்கப்பட்ட முக்கிய நாடகங்கள்.
இந்த காலத்தில்தான் சானட்டுகள் எனப்படும் கவிதை வகையில் 154 கவிதைகளை ஷேக்ஸ்பியர் படைத்தார்.
சானட்டுகள் எனப்படும் கவிதை வடிவம் 14 வரிகளை மட்டுமே கொண்டது. பொதுவான சானட்டுகளில் ஆக்டேவ், செஸ்டட் என்று இரு பகுதிகள் இருக்கும். முதல் எட்டுவரிகளான ஆக்டேவ்வில் ஒரு கருத்தும் அடுத்த ஆறுவரிகளான செஸ்டட்டில் இந்த கருத்திற்கான தீர்வும் இருக்கும். இதிலும் ஷேக்ஸ்பியர் புதுமையை புகுத்தினார். ஷேக்ஸ்பியரின் சானட்டுகளில் முதல் 12 வரிகள் மூன்று பத்திகளாக பிரிக்கப்பட்டிருக்கும். இந்த கவிதையின் நீதி கடைசி இரண்டு வரிகளில் படைக்கப்பட்டிருக்கும்.
ஷேக்ஸ்பியரின் சானட்டுகள் இரண்டு கதாபாத்திரங்களையே கொண்டது. அவரது நெருங்கிய நண்பரான ஓர் இளைஞரையும், அவருக்கு காதல் தோல்வியை அளித்த ஒரு பெண்ணையும் சுற்றியே இவரது சானட்டுகள் படைக்கப்பட்டன. ஆங்கில மொழியின் ஈடுஇணையற்ற காதல் கவிதைகளாக இந்த சானட்டுகள் கருதப்படுகின்றன.
ஷேக்ஸ்பியரின் மூன்றாம் படைப்புக்காலம் (1600-08) துன்பியல் நாடகங்களின் உச்சத்தைத் தொட்டது. காலத்தால் அழியாத காவியங்களான ஜூலியஸ் சீசர், ஹேம்லெட், ஒதெல்லோ, கிங் லியர், மேக்பெத் ஆகிய உணர்ச்சி பூர்வமான நாடகங்கள் இந்தக் காலத்தில் படைக்கப்பட்டன.
ஷேக்ஸ்பியரின் நான்காம் படைப்புக்காலம் (1600-08) அவர் ஓய்வெடுக்கப் போகிறார் என்பதைச் சுட்டிக்காட்டியது. மனிதனின் கடைசி காலத்தில்தான் இயற்கையை மீறிய சக்திகள் மேல் நாட்டம் பிறக்கும் என்று உணர்த்துபவை இந்தக் காலத்து நாடகங்கள். Antony and Cleopatra, The Tempest ஆகிய அற்புதமான நாடகங்களை இக்காலத்தில் படைத்தார் ஷேக்ஸ்பியர்.
16ஆம் நூற்றாண்டு காலத்திலேயே பெண்களை புத்தி சாதுர்யம் உடையவர்களாகவும் தைரியமானவர்களாகவும், சுயசிந்தனையும் சுதந்திரமாக முடிவெடுக்கும் திறன் உள்ளவர்களாகவும், துடிப்பான சுபாவம், கருணை உடையவர்களாகவும் படைத்திருந்தார் ஷேக்ஸ்பியர். போர்ஷியா, ரோஸலிண்ட், பீட்ரிஸ், க்ளியோபட்ரா, ஜூலியட் என்று மகத்துவமான ஆளுமைகளை ஷேக்ஸ்பியரின் பெண் கதாநாயகிகள் இருப்பார்கள்.
ஷேக்ஸ்பியரின் இன்பியல் நாடகங்களில் கதாநாயகிகள் மட்டும்தான் உண்டு, கதாநாயகர்கள் கிடையாது, என்பார், கட்டுரையாளர் ரஸ்கின். ஆனால் ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்களில் கதாநாயகர்கள் மிகவும் வலுவான ஆளுமையாகவும் கதாநாயகிகள் அப்பாவியாகவும் இருப்பார்கள். ஹேம்லெட், கிங் லியர், மேக்பெத், ஜூலியஸ் சீசர் ஆகியவை ஷேக்ஸ்பியரின் மகத்துவமான துன்பியல் நாடகங்கள். இவற்றின் ஒவ்வொரு கதாநாயகனுக்கும் ஒரு பலவீனம் இருக்கும், அந்த பலவீனத்தினால் அவனுக்கு அழிவு ஏற்படும். ஒஃபீலியா, கார்டிலியோ போன்ற பெண் கதாபாத்திரங்கள் மிகவும் அப்பாவித்தனமான சுபாவமும், எளிதில் உடையக்கூடிய மனமும் கொண்டவர்களாகவும் படைக்கப்பட்டிருப்பார்கள்.
எங்கெல்லாம் பெண்கள் அறிவாளியாக, சுதந்திரமான ஆளுமைகளாக உள்ளார்களோ அங்கெல்லாம் வாழ்க்கை இன்பியல் நாடகம் போல் இனிமையாக இருக்கும். ஆண்கள் வலுவாக ஆதிக்கம் செலுத்துவது பலவீனம், அது துன்ப முடிவினையே அளிக்கும் என்று ஷேக்ஸ்பியர் மறைமுகமாக சொல்லியிருக்கிறார், மின்னுவதெல்லாம் பொன்னல்ல, காதலுக்கு கண் இல்லை, ஆள் பாதி ஆடை பாதி, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு, பொன்னான மனம், போன்ற சொற்றொடர்கள் ஷேக்ஸ்பியரின் வசனங்களிலிருந்து பெறப்பட்டவை.
சிலர் பிறக்கும்போதே மகத்துவத்துடன் பிறக்கிறார்கள், சிலர் தங்கள் செயல்களால் மகத்துவம் அடைகிறார்கள், சிலர் மீது மகத்துவம் திணிக்கப்படுகிறது” என்றார் ஷேக்ஸ்பியர். இலக்கியவாதிகள் தங்கள் செயல்களால் மகத்துவம் அடைபவர்கள்.
பொன்மொழிகள்
●அனைவரையும் நேசியுங்கள், ஒரு சிலரை நம்புங்கள், யாருக்கும் தீங்கு செய்யாதீர்கள். ●எதுவுமே செய்யாமல் எதுவும் வருவதில்லை. ●பேசிய சொற்களை திரும்பப்பெற முடியாது, எனவே நீங்கள் பேசுவதற்கு முன் இரண்டு முறை சிந்தியுங்கள். ●உங்கள் அன்பை அதை மதிக்காதவருக்காக வீணாக்காதீர்கள். ●வலுவான காரணங்கள் வலுவான செயல்களைச் செய்கின்றன. ●பல மனிதர்களுக்கு அறிவை விட தலைமுடி அதிகமாக உள்ளது. ●பலரிடம் கேளுங்கள், சிலரிடம் பேசுங்கள். ●செங்குத்தான மலைகளை ஏற முதலில் மெதுவாக நடக்க வேண்டும். ●ஒரு தவறான சண்டையில் உண்மையான வீரம் இல்லை. இந்த உலகமே ஒரு நாடக மேடை நாம் எல்லோரும் அதன் நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் அறிமுகமும், முடிவும் உண்டு ஒருவருக்கே பல வேடங்கள் உண்டு. ஷேக்ஸ்பியரின் இந்த வாக்கியம், நாடகத்தின் பழம்பெருமையை பறைசாற்றுகிறது.
நானூற்று அறுபது ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர், பல்லாயிரம் மைல்களுக்கப்பாலுள்ள, இங்கிலாந்தில் பிறந்தவர். ஆனாலும் காலத்தாலும், இடத்தாலும், மானுடத்தாலும் நம்மோடு நெருங்கிய தொடர்புடையவர். மனித இதயமே அவருடைய நாடக மேடை. மனித இதயத்தில் துடிதுடிப்பு எதுவரையிலும் இருக்கிறதோ, அது வரையிலும் அவருடைய குரலுக்கு மனிதன் செவிசாய்த்து நிற்பான்.
மொத்தத்தில், ஷேக்ஸ்பியரின் வாழ்வு ஏற்புத் தத்துவம், அசாதாரணச் சிக்கல்களையும் அழகையும் சாதாரண மனிதர்கள் மூலம் காட்டும் ஆற்றல், கவித்துவம், இங்கிலாந்தில் தோன்றிய அவரை இந்தியா உள்பட எல்லா நாடுகளுக்கும், எல்லாக் காலங்களுக்கும் ஏற்ற மகாகவியாக உயர்த்தியுள்ளன.
உலகம் போற்றும் நாடகவுலகின் பிதாமகன் என அழைக்கப்படும் ஷேக்ஸ்பியருக்கு இன்று 461 வது பிறந்தநாளாகும். இந்நன்னாளில் இப்பிதாமகனை கொண்டாடி மகிழ்வோம்.